பிரமாண்ட மாளிகை, அரண்மனை, போர்க்களம் என இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டும் பார்த்து வந்த நமக்கு ராஜமௌலி பாகுபலி படத்தின் மூலம் செம்ம விருந்து படைத்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானா இந்த பகுதியில் உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார் என்றால், கண்களை மூடிக்கொண்டு அனைவரும் கூறும் ஒரே வார்த்தை ராஜமௌலி.
இது இவரின் கனவுப்படமும் கூட, கிட்டத்தட்ட 3 வருட தவத்தில் இருந்த, ராஜமௌலி, அவருடன் இணைந்த பிரபாஸிற்கும் இன்று வரமாக அமைந்துள்ளது இந்த பாகுபலி.
கதைக்களம்:
ராஜா கதை என்றாலே நம் நினைவிற்கு வருவது அரியனைக்கு போட்டிப்போடும் அண்ணன், தம்பி பின் அவர்களுக்குள் வரும் மோதல் இது தான். அதேபோல் தான் இந்த பாகுபலியும்.
படத்தின் முதல் காட்சியிலேயே ரம்யா கிருஷ்ணன், ஒரு குழந்தையை(பிரபாஸ்) கையில் ஏந்திகொண்டு, நீரில் மூழ்கி அந்த குழந்தையை மலைவாழ் மக்களிடம் ஒப்படைத்து ஒரு மலையை காட்டி இறக்கிறார்.
பிரபாஸிற்கு எப்போது அந்த மலை மேல் என்ன இருக்கின்றது என்ற ஆர்வம், வளர்ப்பு அம்மா அங்கு நீயெல்லாம் போக கூடாது என்று மிரட்ட, அதையும் மீறி அங்கு செல்கின்றார்.
கொள்கைக்காக போராடும் பெண்ணாக தமன்னா, இவரை பார்த்தவுடன் பிரபாஸிற்கு காதல் பற்றிக்கொள்ள, அந்த கொள்கையை உனக்காக நான் செய்கிறேன் என பிரபாஸ் அங்கு செல்ல, இவரை அந்த ஊர் மக்கள் கடவுளாக பார்க்கின்றனர். பாகுபலி என்றும் அழைக்கிறார்கள்.
ஏன் இவர்கள் பிரபாஸை இப்படி பார்க்கின்றார்கள், யார் அந்த பாகுபலி என்பதை மிக பிரமாண்டமான பிளாஷ்பேக்கில் சொல்லியிருப்பது தான் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்:
படத்தின் முதல் ஹீரோ ராஜமௌலி தான், எப்படி இந்த படத்தை இவர் எடுத்து முடித்தார் என, பார்த்த நமக்கும் தலை சுற்றி போய் விடும், நான் ஈ’யில் குட்டியாக பிரமாண்டத்தை காட்டி இதில் யானை அளவிற்கு தன் திறமையை வெளிபடுத்தியுள்ளார்.
பிரபாஸ் இந்த படத்திற்காக 3 வருடம் தன் உயிரை கொடுத்து தான் நடித்துள்ளார், அவருக்கு இணையாக 6 1/2 அடி உயரத்தில் ராணா மிரட்டியிருக்கிறார். தமன்னாவுக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிப்பிற்கு தீனி போடும் கதாபாத்திரம்.
சத்யராஜ் ஹீரோவிற்கு இணையான பாத்திரம், ஒரு படைத்தலைவனாக ஒவ்வொரு காட்சியிலும் தான் ஒரு மூத்த நடிகர் என நிரூபித்துள்ளார். அதிலும் பிரபாஸ் காலை தன் தலையில் தாங்கும் காட்சி, சல்யூட் சார்.
மரகதமணி இசையில் பாடல்கள் கொஞ்சம் சொதப்பினாலும், பின்னணி இசையில் கலக்கியுள்ளார், இவர்கள் எல்லோரையும் விட நம் கண்களுக்கு விருந்து படைப்பது செந்தில் குமாரின் ஒளிப்பதிவு தான்.
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை கூறாமல் இருக்க முடியுமா? அதிலும் கடைசி ஒரு மணி நேரம் அந்த போர் காட்சிகள், காலரை தூக்கி சொல்லலாம் இது எங்க ஊர் சினிமா என்று. அப்பறம் அனுஷ்கா சொல்ல மறந்துட்டீங்களே என்றால், அவருக்கு இந்த படத்தில் எந்த பெரிதாக பாத்திரம் ஒன்றுமில்லை, ஆமாங்க இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வருகின்றது, அதில் தான் அனுஷ்கா கதாபாத்திரம் முழுமையாக வெளிப்படுமாம்.
க்ளாப்ஸ்:
படத்தின் இரண்டாம் பாதியும், அந்த போர் காட்சிகளும். செந்தில்குமார் ஒளிப்பதிவு, இவை அனைத்திற்கும் மேலாக, ராஜமௌலி தன் கதை மற்றும் திரைக்கதையில் வைத்த நம்பிக்கை.
பல்ப்ஸ்:
கொஞ்சம் ஹீரோயிஸம், ஆந்திரா மசாலா தெரிந்தாலும் இந்த மாதிரி படத்திற்கு எதற்கு குறை கூற வேண்டும்?.மொத்தத்தில் இந்த பாகுபலி இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத சாதனையாளன்.
ரேட்டிங்- 3.75/5
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.